கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரிச்சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிறுவர் பூங்காவில் கடந்த 2018-ம் ஆண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்த நடிகரும் இயக்குநருமான சசிகுமார், 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே இடத்துக்கு வந்தார்.
‘சுப்ரமணியபுரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது சக நடிகர்கள் மற்றும் படக்குழுவினருடன் கொடைக்கானலுக்கு வந்த சசிகுமார், பூங்காவில் மரக்கன்றுகளை நட்டு வைத்திருந்தார். தற்போது அந்த மரங்கள் நன்கு வளர்ந்து பூத்துக் குலுங்குவதை பார்த்து சசிகுமார் மகிழ்ச்சி அடைந்தார். மரங்களின் அருகே குடும்பத்தினருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
தொடர்ந்து கொடைக்கானல் நட்சத்திர ஏரியை உருவாக்கிய ஹென்றி லெவிஞ் நினைவுத் தூணை பார்வையிட்ட அவர், அதில் இடம்பெற்றிருந்த தகவல்களை தனது செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது பேசிய சசிகுமார், மனிதர்கள் விட்டுச் செல்லும் நினைவுகளை காலப்போக்கில் மறந்துவிடலாம். ஆனால் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து பராமரித்தால் அவை உலகிற்கு தொடர்ந்து நன்மை அளிக்கும் என்றார்.
எனவே வாழும் காலத்தில் மரங்களை வளர்த்து, இயற்கையை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
