சென்னை: மலையாள நடிகர் பிருத்விராஜ் நடிப்பில், இயக்குநர் வைசாக் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘கலிபா’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் மூலம் நடிகை மோகினி சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையுலகில் கால் பதித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 1991-ம் ஆண்டு வெளியான ‘ஈரமான ரோஜாவே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
திருமணத்துக்குப் பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்திய மோகினி, சினிமாவில் இருந்து விலகியிருந்தார். கடந்த 2011-ம் ஆண்டு சுரேஷ் கோபியுடன் ‘கலெக்டர்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்த அவர், தற்போது மீண்டும் திரையுலகிற்கு திரும்பியுள்ளார்.
‘கலிபா’ திரைப்படத்தில் மோகினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் ‘நூர்ஜஹான்’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனுடன் அவரது கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
பிருத்விராஜ் – வைசாக் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம் மீது ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் வரும் 20-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோகினியின் வருகை அவரது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
