சென்னை: வழக்கம் போல் குழந்தைகளுக்கு செய்து தரும் டிபனை இப்படி ஆரோக்கியமானதான் செய்து தாருங்கள்.
கேழ்வரகு இட்லி
செய்முறை: கேழ்வரகு, அரிசி, உளுந்து மூன்றையும் எட்டு மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். பிறகு நான்கு மணி நேரம் புளிக்க வைக்கவும். இதில் உப்பு சேர்த்து இட்லித் தட்டில் ஊற்றி ஆவியில் வேகவிடவும்.
குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் மிகவும் நல்லது. இதில் கால்சியம் சத்து அதிகம். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
சோளம் தினை தக்காளி தோசை
செய்முறை: சோளம், தினை தலா ஒரு கப் எடுத்து, சிறிது நேரம் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும். இந்த மாவை தோசைமாவுடன் கலந்து, எட்டு மணி நேரம் புளிக்கவிடவும். இதனுடன் நான்கு தக்காளியைப் பொடியாக நறுக்கி தேவையான அளவு சேர்த்து, தோசையாக ஊற்றி வார்க்கவும்.
சோளம், தினையில் அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளது. கர்ப்பிணிகள், குழந்தைகள் தினமும் சாப்பிடலாம். ரத்தசோகையைத் தடுக்கும்.
வல்லாரை தோசை
செய்முறை: ஒரு கப் அரிசி, தினை மற்றும் உளுந்து கால் கப் எடுத்து நான்கு மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும். இதனுடன் வல்லாரைக் கீரையை நன்றாகக் கழுவி, நறுக்கிச் சேர்க்கவும். உப்பு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தோசைக்கல் காய்ந்ததும் ஊற்றி தோசையாக வார்க்கவும்.
குழந்தைகள் மற்றும் வளரும் பருவத்தினருக்கு மிகவும் நல்லது. வல்லாரைக்கீரை நல்ல ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும்.