புனே: புனேவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மாணவர்களுடன் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட ‘மாணவர் குரல்’ நிகழ்ச்சியில் புனே மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் கல்லூரிப் பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டதாகவும், மாணவர்கள் பெயரில் காங்கிரஸ் அரசியல் கூட்டத்தை நடத்தியதாகவும் பாஜக மகாராஷ்டிர துணைத் தலைவர் கேசவ் உபத்யே குற்றம்சாட்டினார்.
ராகுல் காந்தியின் பேச்சில் வழக்கமான குற்றச்சாட்டுகள் மட்டுமே இடம்பெற்றதாகவும், மத்திய அரசின் வளர்ச்சிப் பணிகளை எதிர்கொள்ள முடியாமல் காங்கிரஸ் சாதி, மதம் சார்ந்த பிரச்சினைகளை எழுப்புவதாகவும் அவர் விமர்சித்தார்.
இதற்கு காங்கிரஸ் தேசியச் செயலாளர் சச்சின் சாவந்த் பதிலளித்துள்ளார். ராகுல் காந்தியின் நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பைக் கண்டு பாஜக நிலைகுலைந்துள்ளதாகவும், இளைஞர்கள் மத்தியில் ராகுல் காந்திக்கு அதிகரித்து வரும் செல்வாக்கைக் கண்டு பாஜக அச்சமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், நிகழ்ச்சிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் ஏராளமான இளைஞர்கள், குறிப்பாக இளம் பெண்கள் திரண்டதாகவும், இது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் சச்சின் சாவந்த் தெரிவித்துள்ளார்.
