பட்டுக்கோட்டை: தஞ்சை தெற்கு மாவட்ட திமுக வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் வெங்கடேசன் – ஸ்ரீதேவி தம்பதியின் மகன் ராம் பிரசாத் – நந்தினி திருமணம் பட்டுக்கோட்டை அருகே கொண்டிக்குளம் பகுதியில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், கடந்த மூன்று மாதங்களில் நான்கு முறை தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்தார். தஞ்சை மாவட்டத்தில் பேசும்போது மிகவும் கவனமாகப் பேச வேண்டும் என்றும், தான் கூறிய கருத்துகளுக்காக கைது செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டியும் அவர் பேசினார்.
கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி தஞ்சையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் தானே தலைமையேற்று பங்கேற்றதாகவும், கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்தப் போராட்டத்தில் சுமார் 22 நிமிடங்கள் பேசியதாகக் குறிப்பிட்ட உதயநிதி, காவிரியில் தண்ணீர் வரவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்ததாக கூறினார். தனது பேச்சுக்காக போலீசார் கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்ல முயன்றதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தஞ்சாவூர் மாவட்டம் எப்போதுமே திராவிடக் கோட்டை எனக் குறிப்பிட்ட உதயநிதி, டெல்டா மாவட்டங்களில் உள்ள சுமார் 30 தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் மட்டுமே ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறினார்.
புதிய அரசு 105 நாட்களாக செயல்பட்டு வரும் நிலையில், அரசால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் விவசாயிகள்தான் என்றும் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
