மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மேலக்கால் ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் மஞ்சள் மற்றும் கறுப்பு நிறத்தில், தூசி மற்றும் கழிவுகள் கலந்த நிலையில் வருவதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகத்தில் பிரச்சினை நிலவி வருவதாகவும், இதனால் பொதுமக்கள் குடிநீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தண்ணீரில் மஞ்சள் நிறம் கலந்திருப்பது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குடிநீர் மேல்நிலைத் தொட்டியை சுத்தம் செய்து முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், இன்று காலை மீண்டும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டபோது தண்ணீர் கறுப்பு நிறத்திலும், அதிகளவில் கலங்கிய நிலையிலும் இருந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
குடிநீரில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்காக சிலர் வெள்ளைத் துணி மூலம் தண்ணீரை வடிகட்டி பயன்படுத்த முயன்றுள்ளனர். இருப்பினும், தண்ணீரின் கலங்கல் முழுமையாக நீங்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
மேலக்கால் ஊராட்சியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் பல மாதங்களாக முறையாக சுத்தம் செய்யப்படவில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் இதுபோன்ற தண்ணீரைப் பயன்படுத்தினால் உடல்நலப் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அப்பகுதி பெண்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, மேலக்கால் ஊராட்சியில் உள்ள அனைத்து குடிநீர் தொட்டிகளையும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அவற்றை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் என்றும், குடிநீரின் தரத்தை ஆய்வகத்தில் பரிசோதித்து பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிநீர் விநியோகத்தில் அலட்சியம் இருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
