தஞ்சாவூர்: வெனிசுலா அதிபரை விடுதலை செய்யக்கோரி பேராவூரணி மற்றும் பட்டுக்கோட்டையில் சிபிஎம் – சிபிஐ ஆர்ப்பாட்டம் நடத்தியது.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியையும், வெனிசுலாவுக்குள் புகுந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ராணுவத்தினர் அத்துமீறி கைது செய்ததைக் கண்டித்து, தஞ்சை மாவட்டம், பேராவூரணி பெரியார் சிலை முன்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழுக்களின் சார்பாக புதன்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே.செந்தில்குமார் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், எம்.செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, பேராவூரணி ஒன்றியச் செயலாளர் வே.ரெங்கசாமி, திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், ஒன்றிய நிர்வாகி தா.கலைச்செல்வன், சிபிஎம் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள்,
கிளைச் செயலாளர், இதர அரங்கத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். சிபிஐ நகரச் செயலாளர் எம்.எம்.சுதாகர் முன்னிலை வகித்தார். சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் சி.பக்கிரிசாமி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.
இதில், விவசாயத் தொழிலாளர் சங்க (சிபிஐ) மாவட்டச் செயலாளர் ஏ.கலியபெருமாள், வி.தொ.ச (சிபிஎம்) ஒன்றியச் செயலாளர் பெஞ்சமின், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் சிவகாமசுந்தரி, உள்ளிட்ட சிபிஎம், சிபிஐ நிர்வாகிகள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கொடுங்கோல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் கண்டித்தும் நிக்கோலஸ் மற்றும் அவரது மனைவியை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.