தஞ்சாவூர்: காதலர் தினத்தையொட்டி, தஞ்சாவூர் பெரிய கோயிலில் காதல் ஜோடிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
காதலர் தினத்தையொட்டி, சுற்றுலா தலங்களுக்கு காதல் ஜோடிகள் அதிக அளவில் செல்வது வழக்கம். இந்நிலையில், தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு காதலர் தினத்தையொட்டி காதலர்கள் வந்தால் தாலி கயிறைக் கொடுத்து கட்ட வைப்போம் என இந்து மக்கள் கட்சியினர் அறிவித்தனர்.
இதன்படி, தஞ்சாவூர் பெரிய கோயில் நுழைவு வாயிலில் இன்று இந்து மக்கள் கட்சி மாநிலத் துணைத் தலைவர் பி. கார்த்திக் ராவ் போன்ஸ்லே தலைமையில் வழக்குரைஞர் பிரிவு மாநிலச் செயலர் சுகுமார், பூதலூர் ஒன்றியச் செயலர் பாலமுருகன் உள்ளிட்டோர் மஞ்சள் கயிறுகளுடன் நின்றனர்.
இதேபோல, தஞ்சை மாவட்ட, மாநகர இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சாய்ரகு தலைமையில் மாநகரச் செயலர் சதீஷ்குமார், மாவட்டச் செயலர்கள் கணேஷ், வீரமணி உள்ளிட்டோர் பெரிய கோயில் நுழைவுவாயிலில் நின்று, அத்துமீறும் காதல் ஜோடிகளை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டாம்; காதலர் தினத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
இதனால், பிரச்னைகள் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரிய கோயிலுக்கு இன்று வந்த காதல் ஜோடிகளை பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் தடுத்தி நிறுத்தி திருப்பி அனுப்பினர். மேலும், இந்து மக்கள் கட்சியினர் தாலி கயிறுகளுடன் நிற்பதைப் பார்த்து சில காதல் ஜோடிகள் கோயிலுக்குள் செல்வதைத் தவிர்த்து வேறு இடம் நோக்கிச் சென்றனர். காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்து மக்கள் கட்சியினர் கலைந்து சென்றனர்.