அமெரிக்கா: அமெரிக்க அரசின் அரசின் நடவடிக்கையை எதிர்த்து குடியேறிகள் போராட்டம் 3வது நாளாக தொடர்ந்தது..
அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், ’அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே’ என்ற கொள்கையில் பல்வேறு அதிரடி திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில், சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் நடவடிக்கையும் ஒன்று. அவர்களைக் கைதுசெய்து கைகளில் விலங்கிட்டு அவர்களின் தாயகங்களுக்கு அமெரிக்க அரசின் சொந்த விமானச் செலவு மூலமாக அனுப்பப்பட்டு வருகின்றனர்.
சிலர், சிறைகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் நடவடிக்கையை, அதிபர் ட்ரம்ப் சமீபகாலமாக தீவிரமாகச் செயல்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளார். ஒரேநாளில், அதிகபட்சமாக 3,000 பேரைக் கைது செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான பணிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அரசின் நடவடிக்கையை எதிர்த்து குடியேறிகள் போராட்டம் 3ஆவது நாளாக தொடர்கிறது. லாஸ் ஏஞ்சலிசில் போராட்டக்காரர்கள் கார்களுக்கு தீ வைத்தனர். போராட்டக்காரர்களை கண்ணீர் புகைக் குண்டு வீசி காவல் துறையினர் கலைத்தனர். போராட்டம் தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே வன்முறையாளர்களை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் கலிஃபோர்னியா அரசுக்கும் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க மைய அரசுக்கும் கருத்து வேறுபாடு தொடர்ந்து நீடித்து வருகிறது. போராட்டங்களை கட்டுப்படுத்த தேசிய படையை ட்ரம்ப் அனுப்பிய நிலையில் அதை பயன்படுத்த கலிஃபோர்னிய அரசு மறுத்துவருகிறது. அதுபோல், லாஸ் ஏஞ்சல்ஸ் அரசும் மறுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.