டெல் அவிவ்: வெறிச்சோடிய இஸ்ரேலின் நகரங்கள்… ஈரான் ராணுவத்தின் ஏவுகணை தாக்குதல் தீவிரமடைந்து வருவதால் டெல் அவிவ் உள்ளிட்ட இஸ்ரேலின் பெரும்பாலான நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, டான் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் கொத்து குண்டுகளையும் ஈரான் ராணுவம் வீசி வருகிறது.
கிளஸ்டர் குண்டு எனப்படும் ஒரு கொத்து குண்டில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட குண்டுகள் இருக்கும். இவை சுமார் 8 கி.மீ. சுற்றளவு வரை வெடித்துச் சிதறி பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடியவை. சில குண்டுகள் பூமியில் புதைந்துவிடும். அவை சில மாதங்கள், சில ஆண்டுகள் கழித்துகூட வெடித்துச் சிதறும். கொத்து குண்டில் விஷ வாயுக்களை நிரப்பினால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும். இதனால் இஸ்ரேல் மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
ஈரான் ஏவுகணைகள், ட்ரோன்கள் இஸ்ரேல் எல்லைக்குள் நுழையும்போது அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்படுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட நகரங்களை சேர்ந்த இஸ்ரேல் மக்களின் செல்போன்களுக்கு அபாய எச்சரிக்கை தகவலும் அனுப்பப்படுகிறது. அபாய ஒலி, எச்சரிக்கை தகவலை பார்த்தவுடன் இஸ்ரேல் மக்கள் வீடுகள், பொது இடங்களில் உள்ள பதுங்கு அறைகளில் தஞ்சமடைந்து விடுகின்றனர்.
இதனால் இஸ்ரேலில் உயிரிழப்பு மிகவும் குறைவாக உள்ளது. இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். முன்னதாக, ஈரானின் இஸ்பஹான் அணு சக்தி தளம் மீது இஸ்ரேல் விமானப் படை நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் போர் விமானங்களின் தாக்குதலில் ஈரானின் 3 ராணுவ தளபதிகள் உயிரிழந்தனர். இதனிடையே, ஈரானில் உள்ள மூன்று முதன்மை அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்துள்ளது என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பும் ஈரானின் பதிலடி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் இஸ்ரேலின் நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.