அமெரிக்கா: ஏமனில் ஹெளதி நிலைகள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
யேமன் தலைநகரான சனாவில் ஹெளதி படைகளின் மீது குறிவைத்து தொடர்ச்சியாக 21 ஏவுகணைகளை அமெரிக்கா வீசியது.
இதில் ஹோடிடா, மரிப் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கட்டடங்கள் சேதமடைந்தன. இதில் பொதுமக்கள் சிலரும் படுகாயம் அடைந்தனர். இதுவரை 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈஸ்டர் திருநாளையொட்டி ஒரு நாள் போர் நிறுத்தம் செய்வதாக இஸ்ரேல் அறிவித்திருந்த நிலையில் அதன் நட்பு நாடான அமெரிக்கா, ஏமன் மீது இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
நள்ளிரவு நேரங்களில் ஏவுகணைகளை வீசி அமெரிக்கா தாக்குதலில் ஈடுபடுவதால், தலைநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், துறைமுகப் பகுதிகளான பாப் அல்-மன்டாப், ஏடன் வளைகுடா உள்ளிட்டப் பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கனரக வாகனங்கள் மற்றும் வணிக தளவாடங்களைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, ஜனவரி வரை தாக்குதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இஸ்ரேல் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால், ஹெளதி படைகளும் இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்களைக் குறிவைத்து செங்கடல் பகுதிகளில் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.