சென்னை: கர படம் மக்களாகிய உங்களின் படம். மக்களின் பிரச்னையை சரியான வழியில் சொல்லும் படமாக இது இருக்கும் என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
போர் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர’ திரைப்படம் நாளை 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், நடிகர் தனுஷ் படம் குறித்த பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
தனது பட இயக்குநர்கள் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் பட்டியலில் விக்னேஷ் ராஜாவும் இணைந்துவிட்டதாக தனுஷ் அவரைப் பாராட்டியுள்ளார். மேலும், படம் குறித்து பேசுகையில், இது நான் நடித்த படமோ அல்லது இயக்குநர், தயாரிப்பாளருக்கான படமோ அல்ல; இது மக்களாகிய உங்களின் படம். மக்களின் பிரச்னையை சரியான வழியில் சொல்லும் படமாக இது இருக்கும் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பொதுவாக ரிலீஸுக்கு முன்பு ஒரு படத்தை மிகைப்படுத்தி பேசாத தனுஷ், ‘கர’ படத்தின் மீது தனக்கு இருக்கும் அதீத நம்பிக்கையை வெளிப்படுத்தினார். திரைப்படம் ஹை ஆக்டேன் த்ரில்லராக இருக்கும். என்னை நம்பி தியேட்டருக்குச் செல்லுங்க, உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். குழந்தைகளைத் தவிர மற்ற அனைவருக்கும் தங்களை சினிமாவில் பார்ப்பது போலவே இருக்கும். மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னை, வலி, அதற்கான தீர்வு மற்றும் வெற்றி என அனைத்தும் திரையில் தெரியும் என்று அவர் கூறினார்.
இதே விழாவில், ‘கர்ணன்’ படப்பிடிப்பின்போது தனக்கு ஏற்பட்ட ஒரு நெகிழ்ச்சியான அனுபவத்தையும் தனுஷ் பகிர்ந்து கொண்டார். கர்ணன் படத்துல கிளைமாக்ஸ் சீன்ல குதிரை மேல இருந்து சின்ன பையன் கீழ விழுந்து என்கிட்ட பேசுவான். ஷூட்டிங் முடிச்சிட்டு ரஷ் பார்க்கும்போது அந்த பையனோட நடிப்பை பாத்து, இந்த பையனோட நடிப்புக்கு பக்கத்துல நம்ம நடிப்பு எடுபடாது,
அந்த பையன் அவ்வளோ எதார்த்தமா, உண்மையா அந்த கிராமத்துல இருக்குற ஒரு பையனா இருக்கானே, இது போல நாமும் இன்னும் எதார்த்தமா நடிக்கணும்னு, அந்த பையன் எப்படி இருக்கான் எப்படி நடிக்கிறான்னு நான் அவனை கவனிக்க ஆரம்பிச்சேன். இந்த மாதிரி புது முகங்கள் வரும்போது அவங்ககிட்ட இருந்து கத்துக்க நிறைய விஷயம் இருக்குனு தான் நான் நினைக்கிறேன் என்றார்.