சென்னை: சர்வதேச கார் பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்று வரும் நடிகர் அஜித்குமார், பிரான்சில் நடைபெறவுள்ள ‘ஏசியன் லெ மான்ஸ்’ தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், திரைப்படங்களைத் தாண்டி கார் பந்தய உலகிலும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
‘அஜித்குமார் ரேசிங்’ என்ற அணியை தொடங்கியுள்ள அவர், துபாய், பெல்ஜியம், ஸ்பெயின் மற்றும் அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை பெற்றுள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது ரேசிங் அணியினரை இரண்டாவது குடும்பமாக கருதுவதாகவும், அடுத்த ஆண்டுக்கான பந்தயத் திட்டங்களை தற்போதே தயாரித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். ‘ஏசியன் லெ மான்ஸ்’ மற்றும் ‘இ.எல்.எம்.எஸ்’ தொடர்களில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், பிரான்சில் நடைபெறவுள்ள ‘ஏசியன் லெ மான்ஸ்’ கார் பந்தயத்திற்காக அஜித்குமார் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவரது குடும்பத்தினரும் பிரான்ஸ் சென்று உற்சாகப்படுத்தி வருகின்றனர்.