திரிச்சூர்: ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பற்றி மக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தவறான பிரசாரம் நடைபெறுவதாக மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் திரிச்சூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ஆர்எஸ்எஸ் அமைப்பில் இசைக்கும் முக்கிய இடம் இருப்பதாகவும், பாரதிய ராகங்களை அடிப்படையாகக் கொண்ட குழுக்கள் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதாகவும் கூறினார். இருப்பினும், இசை நிகழ்ச்சிகள் அமைப்பின் பிரதான நோக்கம் அல்ல என்றும், அமைப்பின் இலக்கை அடைய உதவும் ஒரு செயல்பாடாக மட்டுமே அவை உள்ளன என்றும் விளக்கினார்.
ஆர்எஸ்எஸ் 100 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அதன் வரலாறு மற்றும் பணிகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
உலகிலேயே மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட அமைப்பு ஆர்எஸ்எஸ் என கூறிய மோகன் பகவத், தவறான நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களே இதற்குக் காரணம் என்றும், அதனால் பொதுமக்களிடையே தேவையற்ற அச்சம் நிலவுவதாகவும் குறிப்பிட்டார்.