புதுடில்லி: பொதுத்தேர்வு திருத்த மசோதா மீதான விவாதத்தின்போது மத்திய அமைச்சர் அமித்ஷாவை நாடாளுமன்ற மரபுகளுக்கு எதிரான வார்த்தைகளால் விமர்சித்ததாக கூறப்படும் புகார் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு லோக்சபா உரிமை மீறல் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் பொதுத்தேர்வு திருத்த மசோதா கடந்த மாதம் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. விவாதத்துக்குப் பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுடன் சட்டமாகியுள்ளது.
இந்த மசோதா மீதான விவாதத்தின்போது ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு ஒவ்வாத வகையில் விமர்சித்ததாக பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்திருந்தார்.
மேலும், மசோதா மீதான விவாதத்தின்போது ராகுல் காந்தி நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு ஒவ்வாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக பாஜக எம்.பி. சஞ்சய் ஜெய்ஸ்வாலும் புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகார்களை பரிசீலித்த லோக்சபா உரிமை மீறல் குழு, விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் 28-ம் தேதிக்குள் தனது பதிலை அளிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
