கூடலூர்: முல்லைப்பெரியாறு அணைப் பகுதியை ட்ரோன் மூலம் படம் பிடித்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என கேரள வனத்துறை அமைச்சர் ஷிபு பேபி ஜான் தெரிவித்துள்ளார்.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக சாகுபடிக்காக முல்லைப்பெரியாறு அணையிலிருந்து கடந்த 8-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் தவெக எம்.எல்.ஏ. சபரி ஐங்கரன் பங்கேற்றார்.
அப்போது அவருடன் சென்ற குழுவினர் பெரியாறு புலிகள் காப்பகப் பகுதிக்குள் ட்ரோனைப் பறக்கவிட்டு முல்லைப்பெரியாறு கால்வாய் மற்றும் வனப்பகுதிகளை படம் பிடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டன.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விதிமுறைகளை மீறி ட்ரோன் இயக்கப்பட்டதாக கூறி, கேரள வனத்துறையினர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தனர். இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையே விவாதம் எழுந்தது.
இந்நிலையில் குமுளியில் நடைபெற்ற பழங்குடியின மக்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஷிபு பேபி ஜான், “இது என்ன இந்தியா–பாகிஸ்தான் எல்லையா? பதற்றப்படுவதற்கு” எனக் கேள்வி எழுப்பினார்.
இது டிஜிட்டல் காலம் என்றும், கூகுள் மூலம் தெருவாரியாகவே பல இடங்களை பார்க்க முடியும் என்றும் அவர் கூறினார். இரு மாநிலங்களும் நல்லிணக்கத்துடன் இருக்கும் நிலையில் புதிதாக பிரச்சினையை உருவாக்கவோ அல்லது இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தவோ வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
