சென்னை: அதிமுகவைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை முறையான விசாரணைக்குப் பிறகே ஏற்றதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சபாநாயகர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறி இந்த 6 எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்த நிலையில், அவர்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.
அவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றதை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் சபாநாயகர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், எம்எல்ஏக்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை நேரில் வழங்கியதாகவும், அவை அவர்களது கையெழுத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாகவோ, நிர்பந்திக்கப்பட்டதாகவோ தோன்றவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு எம்எல்ஏவிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி, அவர்கள் சுய விருப்பத்துடன் ராஜினாமா செய்ததை உறுதி செய்த பிறகே கடிதங்கள் ஏற்கப்பட்டதாக சபாநாயகர் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
இதையடுத்து, பதில் மனுவுக்கு விளக்கம் அளிக்க அவகாசம் கோரிய மனுதாரர் தரப்பின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
