கோவை: கோவையில் செய்தியாளர்களை சந்தித்த வி த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை, கல்லூரி அரசியல், திரைப்படங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் சட்டமன்ற செயல்பாடுகள் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.
கல்லூரிகளில் மாணவர்கள் குழுக்களை அமைத்து அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மாணவர்கள் அரசியல் குறித்து பேசுவதும், தங்களது பிரச்சினைகளை அரசு அதிகாரிகளிடம் எடுத்துரைப்பதும் அவசியம் என்றும் கூறினார்.
கல்லூரி அரசியல் சரியாக இருந்தால் பல்வேறு பிரச்சினைகளுக்கு அதுவே தீர்வாக அமையும் என தெரிவித்த அவர், உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தபோதிலும் தமிழகத்தில் கல்லூரி அரசியல் மோசமான நிலையில் இருப்பதாக விமர்சித்தார். இதனால் எதிர்கால அரசியலுக்கு தேவையான இளம் தலைவர்கள் உருவாகாமல் போகும் நிலை ஏற்படலாம் என்றும் கூறினார்.
திரைப்படங்கள் குறித்து பேசிய அவர், சென்சார் போர்டு விதிமுறைகள் மேலும் கடுமையாக இருக்க வேண்டும் என்றார். திரைப்படங்கள் சென்சார் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், பெண்களை ஆபாசமாக அல்லது தரக்குறைவாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெறும் திரைப்படங்கள் வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.
சமூக வலைதளங்களுக்கும் கட்டுப்பாடுகள் தேவை என அவர் கூறினார். சமூக வலைதளங்கள் மூலம் நல்ல விஷயங்கள் நடைபெறுவதுடன், பல்வேறு தவறுகளும் நடைபெறுகின்றன என்றும், பிற நாடுகள் கடுமையான சட்டங்களை கொண்டுவரும் நிலையில் இந்தியா ஏன் தயங்குகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
தமிழக சட்டமன்றம் குறித்து பேசிய அண்ணாமலை, “சட்டமன்றம் டிராமா மன்றமாக இருக்கக்கூடாது; மக்கள் பிரச்சினைகளை ஆக்கப்பூர்வமாக விவாதிக்கும் மன்றமாக இருக்க வேண்டும்” என்றார்.
அரசியலுக்கு வருவதற்கு முன்பு இருந்த பஞ்சாயத்துகள் முதல் சட்டமன்ற உறுப்பினர்களுக்குள் இருக்கும் பிரச்சினைகள் வரை சட்டமன்றத்திலேயே தீர்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார். அண்ணாமலையின் இந்தக் கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
