சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், திருவாரூர், திருப்பத்தூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத மணல் கொள்ளை நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
உளுந்தூர்பேட்டையில் மணல் கொள்ளை தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்த கல்லூரி மாணவி உள்ளிட்ட இரு பெண்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டிய காவல்துறையிடம் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசியல் தலையீடு மற்றும் சில அரசு அதிகாரிகளின் பங்கு இருப்பதாக விமர்சனங்கள் எழுவதாக தெரிவித்த தினகரன், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் குறித்து அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சட்டவிரோத மணல் கொள்ளையை அரசியல் பாரபட்சமின்றி தடுக்க வேண்டும் என்றும், ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
