சென்னை: தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் சுஸ்லான் நிறுவனம் தனது முதலீடுகளை முழுமையாக ஆந்திராவுக்கு மாற்றிவிட்டதாக பரவி வரும் தகவல்களுக்கு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.
விதி எண் 111-ன் கீழ் திருத்த அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அமைச்சர், சுஸ்லான் நிறுவனம் தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், தொழில் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகவே ஆந்திராவிலும் முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஒரு நிறுவனம் ஒரே நேரத்தில் பல்வேறு மாநிலங்களில் தனது தொழிலை விரிவுபடுத்துவது இயல்பான வர்த்தக நடைமுறை என்றும் அமைச்சர் கூறினார். எனவே, ஆந்திராவில் சுஸ்லான் மேற்கொண்டுள்ள முதலீடுகளை தமிழ்நாட்டில் இருந்து நிறுவனம் வெளியேறிவிட்டதாக சித்தரிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், முந்தைய காலகட்டத்தில் தமிழ்நாட்டை விட்டு வெளியேறிய ஒரு முன்னணி நிறுவனத்தை தற்போதைய அரசின் முயற்சியால் மீண்டும் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்த நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் புதிய தொழில் திட்டங்களை தொடங்க உள்ளதாகவும், இதன் மூலம் சுமார் 500 இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அன்னை சின்னப்பிள்ளை சுயஉதவிக் குழு மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக சட்டப்பேரவையில் தாம் பேசிய கருத்துகள் சில தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக அமைச்சர் விளக்கமளித்தார்.
தமது உரையின் சில பகுதிகள் செய்திகளில் தவறாக வெளியாகியதாகவும், அவை முறையாகத் திருத்தப்பட்டு சரியான வடிவில் பேரவைக் குறிப்பில் இடம்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
