ஐதராபாத்: நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது கர்ப்பகால உடற்பயிற்சி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, ஒவ்வொரு பெண்ணின் கர்ப்பகாலமும் தனித்துவமானது என்பதால் உடற்பயிற்சிகளை மருத்துவ ஆலோசனையுடன் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
உடற்பயிற்சி மற்றும் உடல்தகுதியில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வரும் சமந்தா, கர்ப்பகாலத்தில் உடற்பயிற்சியின் இலக்குகள் மாற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஒரு சிறிய உயிரை உடலுக்குள் வளர்க்கும்போது உடற்பயிற்சியின் நோக்கங்களும் மாறுவதாக குறிப்பிட்டுள்ள அவர், உடல் கேட்கும் ஓய்வையும் தேவையான மாற்றங்களையும் வழங்குவது அவசியம் என தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் செஸ்ட் பிரஸ், கெட்டில்பெல் பயிற்சிகள் மற்றும் டெட்லிஃப்ட் உள்ளிட்ட வலிமைப் பயிற்சிகளை மேற்கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கர்ப்பகாலத்திற்கு ஏற்றவாறு இந்தப் பயிற்சிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தான் பல ஆண்டுகளாக உடற்பயிற்சி செய்து வருவதாகவும், தனது மருத்துவரின் அனுமதியுடனும் சிறப்பு பயிற்சி பெற்ற கர்ப்பகால உடற்பயிற்சி பயிற்சியாளரின் மேற்பார்வையிலும் பயிற்சிகளை மேற்கொள்வதாகவும் சமந்தா தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு பெண்ணின் கர்ப்பகாலமும் வெவ்வேறானது என்பதால், தனது பயிற்சிகளைப் பார்த்து மற்றவர்கள் அப்படியே பின்பற்ற வேண்டாம் என்றும், உடற்பயிற்சியை தொடங்குவதற்கு முன்பு மருத்துவரை ஆலோசிக்க வேண்டும் என்றும் அவர் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்துகொண்ட சமந்தா, தனது கர்ப்பத்தை அண்மையில் அறிவித்திருந்தார். தான் நடித்து தயாரித்த ‘மா இண்டி பங்காரம்’ படத்தின் வெற்றி விழாவில், விரைவில் மகப்பேறு விடுமுறை பெற உள்ளதாகவும், அதன் பின்னர் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.
