சென்னை: அன்னை சின்னப்பிள்ளை மற்றும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனா தெரிவித்த கருத்துகளுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், மதுரையைச் சேர்ந்த அன்னை சின்னப்பிள்ளை ‘களஞ்சியம்’ சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் என குறிப்பிட்டுள்ளார்.
அவரது பணியைப் பாராட்டி, 2001-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ‘ஸ்த்ரீ சக்தி’ விருது வழங்கும் நிகழ்ச்சியில் அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், அன்னை சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து வணங்கி கவுரவித்ததாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆனால், சட்டப்பேரவையில் பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, அன்னை சின்னப்பிள்ளை ஹைட்ராலிக் அமைப்பில் ஆயில் கசியாமல் இருப்பதற்கான ‘O-Ring’ ஒன்றை கண்டுபிடித்ததாகவும், இதற்காக வாஜ்பாய் அவரது வீட்டுக்குச் சென்று காலில் விழுந்ததாகவும் கூறியதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த தகவல்கள் வரலாற்றை திரித்துக் கூறுவதாகவும், வாஜ்பாய் மற்றும் அன்னை சின்னப்பிள்ளை ஆகியோரின் மாண்பை கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது முந்தைய பேச்சில் இடம்பெற்ற தகவல்கள் குறித்து அமைச்சர் கீர்த்தனா அளித்துள்ள விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், தவறான தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அவற்றை வெளிப்படையாக சபையில் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோர வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இனி ஆதாரமற்ற தகவல்களை சட்டப்பேரவையில் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
