கேரளா: கேரள திரைத்துறைக்கு வரும் அக்டோபர் 10-ம் தேதிக்குள் தொழில்துறை அந்தஸ்து வழங்கப்படும் என கேரள சினிமா, கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஷ்ணுநாத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் 100 நாள் செயல் திட்டத்தின் காலக்கெடுவான அக்டோபர் 10-ம் தேதிக்குள் கேரள திரைப்படத் துறைக்கு அதிகாரப்பூர்வமாக தொழில் அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பல்வேறு முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனக்குத் தெரிந்தவரை, இந்தியாவில் இதுவரை எந்த மாநிலமும் சினிமாவை அதிகாரப்பூர்வமாக தொழில்துறையாக அறிவிக்கவில்லை என்றும், கேரளம் முதல்முறையாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
திரைத்துறைக்கு தொழில் அந்தஸ்து வழங்கப்பட்ட பின்னர், அதை முறையான தொழில் கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்கான நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு அரசுத் துறைகளுடன் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
இந்த முடிவு நடைமுறைக்கு வந்தால், கேரள திரைப்படத் துறையில் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பயன்பெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. திரைத்துறைக்கு தொழில் அந்தஸ்து வழங்கும் கேரள அரசின் இந்த முயற்சி, இந்திய சினிமா துறையில் முக்கிய முன்னுதாரணமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
