ஊட்டி: விஜய்தான் பிரதமர் வேட்பாளர் என தவெக தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால், அந்தக் கட்சியுடனான கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகும் என்று அக்கட்சியின் மேலிடப் பார்வையாளர் அசோகன் சாலமன் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியில் தற்போது மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் 77 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குந்தா, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் ஒன்றிய தலைவர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், 10 வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய மண்டல கமிட்டி தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஊட்டியில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் டி.நாகராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சியின் மேலிடப் பார்வையாளர் அசோகன் சாலமன் கலந்து கொண்டு இயக்க மறுசீரமைப்பு திட்டம் குறித்து விளக்கினார். மேலும், நிர்வாகிகள் தேர்வுக்கான விருப்ப மனுக்களையும் வழங்கினார்.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அசோகன் சாலமன், “ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பது அனைத்து காங்கிரஸ் தொண்டர்களின் கருத்து. ஒரு கட்சியில் இருப்பவர்கள் தங்கள் தொண்டர்களை உற்சாகப்படுத்த பல்வேறு கருத்துகளை தெரிவிப்பார்கள். அதுபோன்ற கருத்தாகவே இதை பார்க்கிறோம். ஆனால், இது தவெகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக இருந்தால், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகும்” என்றார்.
