நாமக்கல்: “விஜய் ஆட்சிக்கு வந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என கூறினர். ஆனால், 100 நாட்களில் ரூ.45 ஆயிரம் கோடி கடன் வாங்கியதுதான் தவெக ஆட்சியின் சாதனை” என திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெகவினர் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் காணொலிகள் மூலம் மட்டுமே ஆட்சிக்கு வந்ததாக விமர்சித்தார்.
விஜய் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என கூறிய நிலையில், தற்போது ரூ.45 ஆயிரம் கோடி கடன் வாங்கியதுதான் அரசின் சாதனையாக இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார். அந்தத் தொகையில் ஒரு பைசா கூட மூலதனச் செலவுக்கு பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் கடன் மட்டுமே வைக்கப்பட்டதாக தவெகவினர் விமர்சித்து வருவதாகவும், ஆனால் தங்களை விட பல மடங்கு கடன் வாங்கும் நிலைக்கு இந்த ஆட்சி செல்லும் என்றும் ரகுபதி கூறினார்.
ரூ.1,200 கோடி செலவில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் சட்டப்பேரவை அலுவலகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், ஒரு சதுர அடிக்கு ரூ.6 ஆயிரம் செலவாகும் நிலையில், அது எந்த இடத்தில் அமைய உள்ளது என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை என்றார்.
செம்மஞ்சேரியில் திமுக ஆட்சியில் விளையாட்டு நகரம் அமைப்பதற்கான அடிப்படைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், அந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், ராணிப்பேட்டையில் உள்ளதாக கூறப்படும் ஜே.கே. டயர் தொழிற்சாலையை மூட வேண்டும் என தவெக எம்.எல்.ஏ. சட்டப்பேரவையில் பேசியதாகவும், ஆனால் அங்கு அந்தத் தொழிற்சாலை இல்லை என்றும் ரகுபதி விமர்சித்தார்.
“இது ரியல் ஆட்சி அல்ல; ரீல் ஆட்சி” என அவர் கடுமையாக விமர்சித்தார்.
