சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது திமுக மற்றும் தவெக உறுப்பினர்கள் இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது.
விவாதத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ரூ.1,000 கோடி செலவில் அயோத்திதாசர் குடியிருப்பு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அம்பேத்கர் அயலகத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சிலர் தேவையில்லாத விஷயங்களை எழுப்பி தவறான பாதைக்கு செல்வதாகவும் அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, சமூகநீதி குறித்து பேசும் திமுக, கடந்த ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என விமர்சித்தார். மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், மத்திய அரசின் அனுமதியை காரணம் காட்டி தப்பிக்கக்கூடாது என்றார்.
தொடர்ந்து பேசிய கோவி செழியன், அண்ணா கூறிய கருத்தை மேற்கோள் காட்டி, “எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெறும் கரண்டியுடன் வருபவர்கள் போன்றவர்கள். ஆளுங்கட்சியினர் எண்ணெயுடன் கூடிய கரண்டியுடன் வர வேண்டும்” என்றார். சாதிவாரி கணக்கெடுக்கும் உரிமை மத்திய அரசுக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.
அவரது பேச்சுக்கு தவெக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, திமுக உறுப்பினர் பேசிய குறிப்பிட்ட பகுதி அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, 2015 முதல் 2021 வரை திமுகவுக்காக பணியாற்றியது அனைவருக்கும் தெரியும் என்றும், தனது பணிகள் குறித்து திமுக தலைமைக்கும் தெரியும் என்றும் தெரிவித்தார். மேலும், தனது அரசியல் பணிகள் குறித்து பேசத் தொடங்கினால் அது சிலருக்கு நல்லதாக இருக்காது என்றும் அவர் கூறினார்.
இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
