புதுடில்லி: இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு பங்கு இல்லை என்று வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளதாக தகவல்கள் ெளியாகி உள்ளது.
காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது.
இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தாக்குதல் நடத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா, பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. அதன்பின் இரு பேச்சு வார்த்தையை அடுத்து போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இந்தியா -பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் முடிவு குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், “இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம். இந்தியாவிற்கும்- பாகிஸ்தானுக்கும் இடையே நிரந்தரமான போர் நிறுத்தம் என்று நான் நினைக்கிறேன்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெறவிருந்த மிகப்பெரிய அணு ஆயுத போரை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இதனால் பல லட்சம் மக்கள் உயிரிழந்திருக்க கூடும். இந்தியா- பாகிஸ்தானுக்கு வர்த்தகம் உள்பட நிறைய உதவிகளை செய்தோம். சண்டையை நிறுத்தாவிட்டால், இந்தியா- பாகிஸ்தான் உடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என தெரிவித்தோம். வர்த்தகத்தை தன்னைப் போல யாரும் பயன்படுத்தியதில்லை” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சண்டை நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏன் அறிவித்தார் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியது. இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை என்று வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி நாடாளுமன்ற குழுவிடம் விளக்கம் அளித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.