இஸ்லாமாபாத்: சிந்து நதி நீர் விவகாரத்தில் பாகிஸ்தான் அமைச்சரின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து. இந்த ரத்து தற்போது வரை நீடிக்கப்படுவதால் சிந்து நதி நீர் ஒப்பந்ததை நிறுத்தி வைக்கும் முடிவை இந்தியா மறுபரிசீலனை செய்ய பாகிஸ்தான் கோரிக்கை வைத்துள்ளது.
பாகிஸ்தானுக்கு குடிநீர் வழங்குவதில் முக்கிய பங்காற்றுவது சிந்து நதி நீர் தான். தற்போது இந்த சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்தால் அங்கும் பெரும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சிந்து மாகாணத்தில் தண்ணீர் பிரச்சனை தொடர்பாக பாகிஸ்தான் அமைச்சரின் வீட்டிற்கு AK-47 துப்பாக்கியால் சுட்டு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
சிந்து மாகாண உள்துறை அமைச்சர் ஜியாவுல் ஹசன் லஞ்சரின் வீட்டிற்கு தண்ணீர் பற்றாக்குறையை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களில் ஒருவர் நெடுஞ்சாலையை மறித்ததால் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிந்து மாகாணத்திலிருந்து பாகிஸ்தானின் பஞ்சாபிற்கு சிந்து நதியை திருப்பிவிடும் நோக்கில் உருவாக்கப்பட்ட கால்வாய் திட்டத்தை உள்ளூர்வாசிகள் எதிர்த்து வந்தனர். அமைச்சரின் வீட்டிற்கு வெளியே போராட்டக்காரர்கள் AK-47 துப்பாக்கிகளால் துப்பாக்கிச் சூடு நடத்துவது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளது.