புதுடில்லி: டில்லியில் நடைபெற்ற 56வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், வரி அடுக்குகள் குறித்த முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டது. இதன்படி, இதுவரை 4 அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி. விகிதம், இனி இரண்டு மட்டுமே இருக்கும். புதிய சீரமைப்பு வரும் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி, 12% மற்றும் 28% ஜி.எஸ்.டி. விகிதங்கள் நீக்கப்பட்டுள்ளன. இனி 5% மற்றும் 18% என்ற இரண்டு விகிதங்களிலேயே வரி வசூலிக்கப்படும். இதனால் உப்பு முதல் கார் வரை பல பொருட்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்துக்கு பின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “மாநில நிதி அமைச்சர்கள் அனைவரும் ஒருமனதாக இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்” என்றார்.
அவர் மேலும், “இந்த மாற்றம் வெறும் வரி குறைப்பாக இல்லாமல், பொதுமக்களின் வாழ்க்கையையும் வணிகச் சூழலையும் எளிதாக்கும் விதமாக அமைந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது. விவசாயத் துறை, சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள், சுகாதாரம், காப்பீடு, உயிர் காக்கும் மருந்துகள் ஆகியவற்றுக்கும் இம்முடிவு நன்மை பயக்கும்” என கூறினார்.
இழப்பீடு வரி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. எனினும், வரும் அக்டோபர் 31 வரை புகையிலை மற்றும் சிகரெட்டுகளுக்கு 28% வரியுடன் கூடுதலாக இழப்பீடு செஸ் தொடரும். பிரதமர் நரேந்திர மோடி, “இந்த சீர்திருத்தம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு, சிறு வணிகர்களுக்கு வணிகம் செய்வதை எளிதாக்கும்” என தெரிவித்துள்ளார்.