சேலம்: தமிழக வெற்றிக் கழக அரசு கூட்டணி கட்சிகளின் ஆதரவால் மட்டுமே ஆட்சியில் நீடித்து வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுவதாகவும் அவர் விமர்சித்தார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரவில்லை என்று கூறினார்.
அவர் பேசுகையில், “ஒரு நாற்காலிக்கு நான்கு கால்கள் இருக்கும். அதில் இரண்டு கால்கள் மட்டுமே ஆட்சியாளர்களுடையவை. மீதமுள்ள இரண்டு கால்கள் கூட்டணி கட்சிகளின் ஆதரவு. அந்த ஆதரவு விலகினால் ஆட்சி தானாகவே கவிழ்ந்து விடும்” என்றார்.
தேர்தலின்போது இரண்டு திராவிடக் கட்சிகளையும் அகற்ற வேண்டும் என்று பேசிய தவெக தலைவர், தற்போது திமுக தலைமையிலான கூட்டணியில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சியை நடத்தி வருவதாகவும் அவர் விமர்சித்தார்.
மேலும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500, ஆண்டுக்கு ஆறு சமையல் எரிவாயு சிலிண்டர்கள், பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம் மற்றும் பட்டுச் சேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
ஒரு குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.2,500 வழங்க ஆண்டுக்கு சுமார் ரூ.45,000 கோடி தேவைப்படும் நிலையில், அந்த நிதி எங்கிருந்து வரப்போகிறது என்பதை அரசு விளக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதிமுக பீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுச்சி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.