திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத்திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதையொட்டி கோவில் கோபுரங்கள் தீயணைப்பு வாகனம் மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா வரும் 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவாக 10 நாட்கள் நடைபெற்று, 7-ம் தேதி மகா தேரோட்டமும், 13-ம் தேதி பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழாவில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, விரிவான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
மேலும், சுவாமி திருவீதியுலா வாகனங்கள் சீரமைத்தல், தேர் புதுப்பித்தல், பக்தர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை ஒருங்கிணைக்க உயர் அதிகாரிகளைக் கொண்ட மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலின் பிரதான கோபுரங்களை சுத்தம் செய்யும் பணி நேற்று தொடங்கியது.
இதையொட்டி, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் தீயணைப்பு வாகனம் மூலம் கோபுரங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அண்ணாமலையார் கோயிலின் முக்கிய கோபுரங்களின் கல்காரம் (அடிவாரம்) வரை தண்ணீர் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.