விருத்தாச்சலம் : வைகாசி பிரம்மோற்சவத்தின் சிகர நிகழ்வாக விருத்தாசலம் ராஜகோபால சுவாமி கோவிலில் இன்று தேரோட்டம் பக்தர்களின் பக்தி முழக்கத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.
விருத்தாசலம் பெரியார் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ராஜகோபால சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், உற்சவங்கள் நடைபெற்றன. கடந்த 1-ம் தேதி மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 2-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 3-ம் தேதி வேடுபறி உற்சவமும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக ருக்மணி, சத்தியபாமா சமேத ராஜகோபால சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய சுவாமியை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது.
நாளை நடைபெறும் விடையாற்றி உற்சவத்துடன் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.