பழநி: கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி, ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் கடந்த 3 நாட்களில் ரூ.10 கோடிக்கு காய்கறிகள் விற்பனையானதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி சந்தைகளில் ஒன்றான ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து தினமும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகின்றன. இங்கிருந்து விற்பனையாகும் காய்கறிகளில் சுமார் 50 சதவீதம் கேரளாவுக்கு செல்கின்றன.
கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் ஆகஸ்ட் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அங்குள்ள வியாபாரிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் அதிக அளவில் காய்கறிகளை கொள்முதல் செய்தனர். இதனால் கடந்த 3 நாட்களாக சந்தையில் விற்பனை களைகட்டியது.
கேரளாவில் அதிகம் பயன்படுத்தப்படும் பயறு வகைகள், பூசணிக்காய், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் ரூ.2.5 கோடிக்கு காய்கறிகள் விற்பனையான நிலையில், 3 நாட்களில் மொத்த விற்பனை ரூ.10 கோடியை எட்டியுள்ளது.
இந்த ஆண்டு பல மாவட்டங்களில் காய்கறி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து சுமார் 70 சதவீத காய்கறிகள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக லாபம் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
