சென்னை: கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்த கருத்துகளுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மூன்று தமிழர்கள் வனப்பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கர்நாடக விவகாரத்தில் தலையிடக்கூடாது என சிவக்குமார் கூறியிருப்பது ஆணவத்தின் உச்சம் என விமர்சித்துள்ளார்.
மான் வேட்டையாடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் மூன்று தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்த சீமான், சம்பவத்தில் தொடர்புடைய வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு கர்நாடக அரசுக்கு அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இரு மாநில மக்களிடையே பகைமை ஏற்படாத வகையில் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
