சென்னை: தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா பகுதியில் அமைந்துள்ள கோட்டை கிறிஸ்து நாதர் கோயிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே உள்ள கோட்டை சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் நேற்று இரவு புத்தாண்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இரவு 11.15 மணிக்கு 2025-ம் ஆண்டு இறைவன் செய்த நன்மைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆராதனை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு 2026-ம் ஆண்டு புதிய ஆண்டில் கடவுளுடைய வழிநடத்தலுக்காக சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இந்த ஆராதனையை ஆயர் பெஞ்சமின் நடத்தி சிறப்பு செய்தி அளித்தார்.
இதில் திருச்சபை மக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆராதனை முடிந்தவுடன் அனைவருக்கும் கேக் மற்றும் தேநீர் வழங்கப்பட்டன, இதற்கான ஏற்பாடுகளை சேகர குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர். புத்தாண்டையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள சி.எஸ்.ஐ,. தூய பேதுரு ஆலயம், தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் உள்ள புனித அடைக்கல அன்னை ஆலயம், மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயம், வடக்குவாசலில் உள்ள அருளானந்தர் ஆலயம் மானம்புச்சாவடி சூசையப்பர் ஆலயம், மாதாக்கோட்டை புனித லூர்து சகாய அன்னை ஆலயம் உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் புத்தாண்டு கூட்டு பாடல் திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்